புவனேஸ்வர் : ஒடிசாவில் கொரோனாவை மாநில பேரிடராக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகின் பலநாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. தொடர்ந்து, உயிர் பலியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாதிப்புகளை குறைக்கும்வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒடிசா அரசு கொரோனாவை மாநில பேரிடராக பிரகடனம் செய்திருப்பதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது : கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது. அத்துடன் நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31 வரை மூடப்படும். தேர்வு எழுதுபவர்களுக்கு இது பொருந்தாது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் 31 வரை மூடப்படும். அத்யாவசியமற்ற கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ரத்து செய்ய வேண்டும். சமூகக் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் 29ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.